Wednesday, December 17, 2008

முதல் தேதி

தெருவையே வெறித்துப் பார்க்க
தினமும் நான் அமரும்
என் வீட்டுத்திண்ணை.

என் கனவுகளை
ஆகாயமார்க்கமாய் அலையவிட்ட
இரவுநேர மொட்டைமாடி.

அமரவைத்து அங்கே குமுறவைத்த
மாடிப்படிகள்.

வழக்கம்போலவே திட்டும் அப்பா.
ஏக்கவிழிகளுடன் வழியனுப்பும் அம்மா.
என்னைப் பொருட்படுத்தாமல்
வீடுபெருக்கும் தங்கை.

வழியில் முறைக்கும்
இஸ்திரி வண்டிக்காரன்.

இரகசியமாய்ச் சிரித்துவிட்டு
ஜாடைபேசும் குழாயடிப்பெண்கள்.

பார்வையால் என்னை உதைத்து
பைக்கை எடுக்கும்
பழைய பள்ளியாசிரியர்.

சிநேகமாகச் சிரிக்கும்
தெருக்கோடிப் பிச்சைக்காரன்.

என் காலை உரசி
வாலை ஆட்டும் தெருநாய்.

தண்ணீர் அருந்தசெல்லும்போதும்
இனிப்பாய் அழைக்கும்
இட்லிக்கடைப் பாட்டி.

இவர்களைக் கடந்து
என் காலைப்பொழுது
ஒரு டீக்கடையில் ஒதுங்குகிறது.

அங்கே,
பலமுறை படித்துவிட்ட
தினசரிகள் சிதறிக்கிடக்கும்.
வானொலி ஒலித்துக்கொண்டிருக்கும்.

டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
தேதி கேட்டான்.
முதல்தேதியென்றேன்.
முகம் மலர்ந்தான்.

கேள்விக்குறி ஒன்று
என்னைத்தூக்கில் போட்டது.
முதல்தேதி எப்போது
என்முகத்தை மலரச்செய்யும்???

8 comments:

  1. டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
    தேதி கேட்டான்.
    முதல்தேதியென்றேன்.
    முகம் மலர்ந்தான்.

    edharthamana kavithai,,nice one

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க.எளிமையாய் எழுதுவது ஒரு சிறப்பு அம்சம். எளிமையாய், அதேசமயம் அருமையான கவிதைகள் எழுதுவது எல்லோருக்கும் வாய்த்துவிடும் சாத்தியமல்ல. நிறைய எழுதுங்க.

    ReplyDelete
  3. பொதுவாக எனக்கு கவிதை வாசிப்பது கடினம். ஆனால் உங்களுடைய 'முதல் தேதி' கவிதை மனதிற்கு நெருக்கமாக இருந்தது. எளிமையான சொற்களை கையாண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி Krishna Prabhu & ச.முத்துவேல்!

    ReplyDelete
  5. //வழக்கம்போலவே திட்டும் அப்பா.
    ஏக்கவிழிகளுடன் வழியனுப்பும் அம்மா.
    என்னைப் பொருட்படுத்தாமல்
    வீடுபெருக்கும் தங்கை.//

    இயல்பான , ஒரு யதார்த்தமான கவிதை என்றுமே யாவருக்கும் பிடிக்கும்.....எனக்கும் கூட .......
    அருமையாக உள்ளது உங்கள் கவிதை.........

    ReplyDelete
  6. unga elimayaana varigl arpudham nanbaa

    ReplyDelete