Wednesday, December 17, 2008

முதல் தேதி

தெருவையே வெறித்துப் பார்க்க
தினமும் நான் அமரும்
என் வீட்டுத்திண்ணை.

என் கனவுகளை
ஆகாயமார்க்கமாய் அலையவிட்ட
இரவுநேர மொட்டைமாடி.

அமரவைத்து அங்கே குமுறவைத்த
மாடிப்படிகள்.

வழக்கம்போலவே திட்டும் அப்பா.
ஏக்கவிழிகளுடன் வழியனுப்பும் அம்மா.
என்னைப் பொருட்படுத்தாமல்
வீடுபெருக்கும் தங்கை.

வழியில் முறைக்கும்
இஸ்திரி வண்டிக்காரன்.

இரகசியமாய்ச் சிரித்துவிட்டு
ஜாடைபேசும் குழாயடிப்பெண்கள்.

பார்வையால் என்னை உதைத்து
பைக்கை எடுக்கும்
பழைய பள்ளியாசிரியர்.

சிநேகமாகச் சிரிக்கும்
தெருக்கோடிப் பிச்சைக்காரன்.

என் காலை உரசி
வாலை ஆட்டும் தெருநாய்.

தண்ணீர் அருந்தசெல்லும்போதும்
இனிப்பாய் அழைக்கும்
இட்லிக்கடைப் பாட்டி.

இவர்களைக் கடந்து
என் காலைப்பொழுது
ஒரு டீக்கடையில் ஒதுங்குகிறது.

அங்கே,
பலமுறை படித்துவிட்ட
தினசரிகள் சிதறிக்கிடக்கும்.
வானொலி ஒலித்துக்கொண்டிருக்கும்.

டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
தேதி கேட்டான்.
முதல்தேதியென்றேன்.
முகம் மலர்ந்தான்.

கேள்விக்குறி ஒன்று
என்னைத்தூக்கில் போட்டது.
முதல்தேதி எப்போது
என்முகத்தை மலரச்செய்யும்???

நாம்

பதற்றமில்லாமல் நாம் இன்னும்
பக்கத்தில் நிற்கப் பழகவில்லை.


கைநடுங்காமல் பேனாவோ காகிதமோ
கொடுத்ததாய் தகவலில்லை.


எதார்த்தமாய் என்றாவது
நேருக்குநேர் பார்த்திருக்கிறோமா?
இயல்பாய் ஏதாவது பேசியிருப்போமா?


“சுகமா?”என்ற சம்பிரதாயங்களில்லாத
சந்திப்புகள் உண்டா?
சுற்றும்முற்றும் பார்க்காமல்
பேசிக்கொண்டதாய் செய்தியுண்டா?


இடைவெளிவிடாமல்
இருபது வார்த்தைகள்கூட
இப்போதும் பேசமுடியாது.


காலங்குலத்திற்கு மேல்
கடைசிவரை சிரித்ததுமில்லை.


ஒருநாள் குருட்டு தைரியத்தில்
கொஞ்சம் உண்மை உலறினேனே.
அன்று என் கைக்குட்டைக்கும் வியர்த்தது
உனக்குக் கட்டாயம் தெரியும்.


அரைமனதுடன் அன்பளிப்பு வாங்கி
முக்கால்மனதுடன் முகம்மலர்ந்து
பண்டிகைநாட்களில் பரிமாறிக்கொண்டோம்.


பலருடன் பழகிய அனுபவங்களிருந்தும்
பழகத்தெரியாதவர்கள் போல் நடித்தோம்.


நம் நட்புநாடகத்தில்
எதார்த்தத்திற்கு மட்டும்
எந்தக் கதாப்பாத்திரமும் தரப்படவில்லை.


சத்தியமாகச் சொல்கிறேன் தோழி!
நாம் சமூகத்தின் விமர்சனமில்லாமல்
பழகவில்லை.


தவறான கண்ணோட்டங்களிலிருந்து
தப்பிப் பழகியிருப்போமா?இல்லை.
இருந்தும் பழகிக்கொண்டுதான்
இருக்கிறோம் நண்பர்களாய்.


பாவம் தோழி!
நம் நட்பிற்கே இக்கதியென்றால்
காதலர்கள் பாவம் தோழி.

புதுக்கவிதைகள்

வானம் குடைமடக்கியபின்னும்
நிலவில் மழை பொழிந்தது.

தென்றல் மாளிகையின்
ஜன்னல்கள் திறந்தன.

வானவில் இரசிக்காதவன்
வெறுமையில் லயித்தான்.

நெலிகோலம் விரும்பாதவள்
இரங்கோலி இரசித்தாள்.

பனிபடர்ந்த சாலையிலே
விளக்கணைத்து சில விடியல்கள்.

பூ சிரிக்காத செடியில்
முள் மலர்ந்தது.

நிழல்தராத மரக்கிளையில்
நெருஞ்சிக்காட்டின் சுள்ளிகள்.

மரபுமரங்கள் விழுதுவிடுமுன்
புது(க்க) விதைகளின் விழுதுகள் வேர்விட்டன.

தமிழ்நதி வற்றுமுன்
தலைதூக்கினோம்.

மேகங்களை மென்மையாக்கி
தண்ணீர் சிற்பங்கள் செய்தோம்.

நரகம்

உன் குங்குமமே நம் நட்பின்
முற்றுப்புள்ளியாகப்போகிறது.
தாலிக்கயிற்றை நீ ஏற்கும் தினத்தில்
நம் நட்பின் பாசக்கயிறுகளை
நான் தொலைத்திருப்பேன்.

உன் நிழலையும் இரசிக்கத்தவறாதவன்
இன்று சில நிஜங்களையும்
நிராகரிக்கப் பழகிவிட்டேன்.

காய்ச்சலிலும் சிரித்தேன்,
கண்முன் நீ தோள் கொடுத்தாய்.
இரண்டாம் தாய்மடியின்றி
இனி எங்கு தலை சாய்ப்பேன்?

நான் அறிந்தவரையில்
உன் இதயம் பிஞ்சுப்பிரதேசம்.
அங்கே மனைவிக்குரிய முதிர்ச்சியை
யார் செருகினார்கள்?

அம்சங்கள் அத்தனையும் பேசித்தீர்த்தோம்.
அரசியலையும் காமத்தையும் தானே
கடைசிவரைக்கும் விட்டுவைத்தோம்.
இன்னும் நமக்கிடையில்
இரண்டே வார்த்தைகள்.
“வாழ்த்துக்கள்”,”வருகிறேன்”

மலர்செண்டுடன் உன் மணநாளில்
சந்திப்பேன்.
கூட்டத்தில் ஒருவனாய் கொஞ்சநேரம்
நின்றுவிட்டுச் செல்வேன்.
விடைபெறும் வேளையில்
உதடுகள் பூப்பூத்தாலும்
கீழிமையில் கண்ணீர் ததும்பும்.

காதலில் தோல்வியென்றால்
கயிற்றிலோ ஆற்றிலோ போயிருப்பேன்.
நட்பில் தோற்றதால்......
இது நட்பின் முடிவா?தோல்வியா?
தெரியவில்லை.

கடைசியாக ஒன்றுமட்டும் சொல்வேன்.
உன் மணவாழ்க்கை எந்நாளில்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதோ
அதேநாளில் நம் நட்பு
நரகத்தில் நிச்சயிக்கபட்டுவிட்டது.

பூஉறவின் புதியவரவு

அழகிழந்த மலர்களுக்கு
அவள் காரணமாகிவிட்டாள்.

அவளுடைய உதடுகள்
பெரும்பாலும் சிரிப்பை
மட்டுமே சிரிக்கின்றன.
வாழ்த்துக்களை வழியனுப்பியே
என்னைத்
தொலைபேசிக்குள் தொலைத்துவிட்டாள்.
அவள் கொடுத்த அன்புப் பரிசுகள்
எனக்குள் நானே ஏலம்விட்டு
இன்னும் விலைபோகாதவை.

சலனப்படும் மனங்களுக்கு
சாட்டையடி கொடுக்கும்
கலப்படமற்ற பார்வை.
கொஞ்சம், மனம் திறந்து
கொஞ்சும் மொழி பேசுவாள்.
கோடைவெயிலுக்கும்
குளிர்காய்ச்சல் வந்துவிடும்.
குலுங்கும் கொலுசுமணியோசை,
சேகரித்த என்செவிகள்
முக்தியடைந்தன.

காலைப் பேருந்தின்
சாளர இருக்கையிலிருந்து
கம்பிகளின் ஊடே
கண்ணசைத்து கைகாட்டுவாள்.
காற்றுசெய்த கலவரத்தில்
அவள் கூந்தல் களைந்திருக்கும்.
அதில் காயா ஈரம்,
காதோர முடிவழியே
கன்னத்தில் வழியும்.
அது அகிம்சாவாத நீர்வீழ்ச்சி.

ஸ்டிக்கர் பொட்டை
சரியாய் வைத்திருக்காமாட்டாள்.
இருந்தும் அவள்நெற்றி
இரண்டு புருவங்களுக்கிடையில்
புன்னகை துளிர்க்கும்.
தென்றலைத் தாலாட்டும் அவள்
துப்பட்டா அசைவுகளுக்கு
இணங்க என்மனம் மறுத்ததில்லை.

சிலசமயம் சோகமாகிவிடுவாள்.
அப்பொழுதுமட்டும் என்
சொர்க்கத்தில் ஊரடங்கு உத்தரவு.
தோல்வியின் விளிம்பில் நான் துவண்டிருந்தால்
உதட்டுவார்த்தைகளால்
உள்நெஞ்சில் ஒத்தடமிடுவாள்.

இயற்கையின் படைப்பில்
இத்தனை மென்மையா?
பிறவிகளில் அரியதோர்
புதையலிந்தப் பெண்மையா?
இப்படியொரு புதிய உறவுக்காகத்தான்
பிறவியெடுத்தேனோ?
அடிக்கடி அடிநெஞ்சில்
சந்தேகம் புருவமுயர்த்தும்.

என் கல்லூரிவாழ்வில்
வசந்தமாய்ப் பூத்தவளே!
நட்பில் பிரிவுண்டென்றால்
அந்த நட்பிலெனக்கு நம்பிக்கையில்லை.
கடைசிவரை உன்னுறவு வேண்டும்,
தொடர்வாயா?
கனவாய் களைந்து போவாயா?

இரவு

பகல் இறந்துபோனதும்
இரவு கருப்பணிந்து
இரங்கல் தெரிவிக்கிறதோ?

இந்த இரவு,
ஏன் கதிரவனைக் கடன்வாங்கி
நட்சத்திரங்களாய் நறுக்கிப்போட்டது?

பகலைப் பணயம் வைத்து
இரவு போடும் ஆட்டமா இது?
வெயிலில் வறுக்கப்பட்டே
வானம் கருகிப்போனதா?

யாருமறியாமல் இரவு வேளையில்
தலை நரைத்த மேகங்கள்
தடவிக் கொண்ட சிகைச்சாயமா?

பகலே! நீ ஒரே ஒரு ஒளிதான்.
இரவைப் பார்
இதில் எத்தனை ஒளிவெள்ளம்.

விலைமகள்

அசுரப் பசியால்

அவளுடைய மானம் அழிகிறது.

வறுமை வேலி தகர்த்து

அவளை ஊர் மேய்கிறது.

உடல் வாடகைக்கு விடப்பட்டதால்

அவளுடைய உயிர் வாழ்கிறது.

இசை

செதுக்கப்பட்ட ஒலி

சப்தம் எடுத்த சபதம்

நிறைவேறியதன் விளைவு.

காற்று பேசும் காவியம்.

சுரங்கள் தீட்டும் ஓவியம்.

இராகங்களால் உள்மனதை

இரட்சிக்கும் ஏற்பாடு.

செவிகளுக்கு ஒப்பற்ற அணிகலன், இசை.

அப்துல் கலாம்

இந்தியக் கூட்டிற்கு இரைதேடி

இந்த நீலப்புறா,

அணுக்களை அசைபோட்டுக்கொண்டே

அயராது சிறகடித்துக்கொண்டிருக்கிறது,

அதன் அக்னிச்சிறகுகளால்...

காதல்

இதயத்தின் நான்கறைகளிலும்

இடியுடன் கூடிய மழை.

உன் மூச்சுக்காற்றின் மூலக்கூறுகள்

என் நுரையீரலை வட்டமிட்டபடியே.

உன் நிழல் தீண்டித்தீண்டியே

என் ரேகை தேயும்.

என் நெற்றிச் சுருக்கங்களில்

உன் நினைவு விரியும்.

ஆத்திரத்தில் நான் அரைந்தாலும்

உன் கண்களின் கார்காலம்

என் கோபத்தின் கொள்ளியை அணைத்துவிடும்.

மரணத்தின் தூண்டில் என் கண்களுக்கு

மங்கலாகத் தெரிகின்றது.

இப்பொழுது என்னுடலில்

இதயம் மட்டுமே அசைகிறது.

அன்பே! நம் மணிவிழா முடிந்தாலென்ன?

என் மனமின்னும் மார்க்கண்டேயன்,

நம் காதல் இன்றும் சிரஞ்சீவி தான்.

இது உன் கல்லறைமீது சத்தியம் கண்மணி.

அழகி

என் ஊரில்
நீ குடியேறிய நாள்முதலே
பூமி எனக்குப் புலப்படாமல் போனது.

ஒவ்வொரு விடியலும்,
உன்வீட்டு வாசல் ஒரு
உலகவரைபடத்தை எனக்குப் பரிசளிக்கிறது.
நான் அழுவதும் சிரிப்பதும்
அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது, இப்பொழுதெல்லாம்.
நான் கண்ணிமைக்கும் கனத்தை
ஒரு இரவு தக்கவைத்துக்கொள்ளும்
அவசரம் புரியவில்லை.
இறுகப் பூமியைப் பற்றிக்கொண்டபோதும்
ஈர்ப்புவிசையை இழக்கிறேன் நான்.

என் விழித்திரைக்கும்
உலகிற்குமான இடைவெளியில்
கூடாரம் போட்டவள் நீ.
எல்லா இரவுகளிலும்
கனவும் நானும் உன்னைக் காண்கிறோம்.

நீ ஒரு பார்வை வீசிப் புறப்படும்
ஓர் அதிகாலைக் கனவில்,
என்னையறியாமல் நான் உறங்கிவிடுகிறேன்.

மழை

முகிலெடுத்து வான்வெளி
முத்துமழை தூவியது.
மழை மண்ணைச் சேருமுன்னே
மண்வாசம் என்னைச் சேர்ந்தது.

பூக்களிலே தேனெடுத்த
பொன்வண்டுகள் காணவில்லை.
பூங்காற்றில் புழுதியெலாம்
போன இடம் தெரியவில்லை.

நீர்வடியும் இலைகளிலே
நேற்றில்லா நடுக்கங்கள்.
நீலவானில் கீறல்விடும்
நீளமான சுருக்கங்கள்.

மரக்கிளையில் பறவையெலாம்
கூடுகளில் குளிர்காய
அடிக்கடி பயமுறுத்தி
அலறுகிறது இடியோசை.

காடுகளில் நீரோட
வண்ணமயில் நீராட
ஈரக்காற்று என் ஈரல் தொட்டது.

தூரலின் இரைச்சலை
தொடங்கியதும் நான் இரசிக்க
இடைவந்த இடரொன்றாய்
தவளைகள் கர்ஜிக்க
தரைமேல் வெப்பமெலாம்
தலைதெறிக்க ஓடக்கண்டேன்.

தட்டுகளில் நீர்தெறித்து
தாளங்கள் எழுகையிலே
மிச்சமுள்ள வறட்சியெலாம்
மாண்டுபோக நான்கண்டேன்.

இறங்கிவந்து மண்மேலே
ஈரக்கவிதை மேகமெழுத
இயற்கையின் குளியலை
இரகசியமாய் எட்டிப் பார்த்தேன்.

மெய்மறந்து இரசிக்கையில்
முழுக்க நனைந்து நான் நின்றேன்.

அநாதைப் பிணம்

ஆயிரக்கணக்கில் ஈக்கள்,
ஆறேழு காக்கைகள்,
ஏராளமாய் எறும்புகள்,
இரண்டு நாய்கள்.
இத்தனை உறவுகளைக் கொண்டது,
ஒரு அநாதைப் பிணமா?