Wednesday, December 17, 2008

நரகம்

உன் குங்குமமே நம் நட்பின்
முற்றுப்புள்ளியாகப்போகிறது.
தாலிக்கயிற்றை நீ ஏற்கும் தினத்தில்
நம் நட்பின் பாசக்கயிறுகளை
நான் தொலைத்திருப்பேன்.

உன் நிழலையும் இரசிக்கத்தவறாதவன்
இன்று சில நிஜங்களையும்
நிராகரிக்கப் பழகிவிட்டேன்.

காய்ச்சலிலும் சிரித்தேன்,
கண்முன் நீ தோள் கொடுத்தாய்.
இரண்டாம் தாய்மடியின்றி
இனி எங்கு தலை சாய்ப்பேன்?

நான் அறிந்தவரையில்
உன் இதயம் பிஞ்சுப்பிரதேசம்.
அங்கே மனைவிக்குரிய முதிர்ச்சியை
யார் செருகினார்கள்?

அம்சங்கள் அத்தனையும் பேசித்தீர்த்தோம்.
அரசியலையும் காமத்தையும் தானே
கடைசிவரைக்கும் விட்டுவைத்தோம்.
இன்னும் நமக்கிடையில்
இரண்டே வார்த்தைகள்.
“வாழ்த்துக்கள்”,”வருகிறேன்”

மலர்செண்டுடன் உன் மணநாளில்
சந்திப்பேன்.
கூட்டத்தில் ஒருவனாய் கொஞ்சநேரம்
நின்றுவிட்டுச் செல்வேன்.
விடைபெறும் வேளையில்
உதடுகள் பூப்பூத்தாலும்
கீழிமையில் கண்ணீர் ததும்பும்.

காதலில் தோல்வியென்றால்
கயிற்றிலோ ஆற்றிலோ போயிருப்பேன்.
நட்பில் தோற்றதால்......
இது நட்பின் முடிவா?தோல்வியா?
தெரியவில்லை.

கடைசியாக ஒன்றுமட்டும் சொல்வேன்.
உன் மணவாழ்க்கை எந்நாளில்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதோ
அதேநாளில் நம் நட்பு
நரகத்தில் நிச்சயிக்கபட்டுவிட்டது.

3 comments:

  1. நன்றாக இருக்கிறது, ஆனால் இன்று இருக்கும் நடைமுறை இப்படி இல்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  2. மலர்செண்டுடன் உன் மணநாளில்
    சந்திப்பேன்.
    கூட்டத்தில் ஒருவனாய் கொஞ்சநேரம்
    நின்றுவிட்டுச் செல்வேன்.
    விடைபெறும் வேளையில்
    உதடுகள் பூப்பூத்தாலும்
    கீழிமையில் கண்ணீர் ததும்பும்.

    காதலில் தோல்வியென்றால்
    கயிற்றிலோ ஆற்றிலோ போயிருப்பேன்.
    நட்பில் தோற்றதால்......
    இது நட்பின் முடிவா?தோல்வியா?
    தெரியவில்லை.

    கடைசியாக ஒன்றுமட்டும் சொல்வேன்.
    உன் மணவாழ்க்கை எந்நாளில்
    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதோ
    அதேநாளில் நம் நட்பு
    நரகத்தில் நிச்சயிக்கபட்டுவிட்டது.
    ///// உள்நெஞ்சின் மொழிகள் உதட்டிலே கவிதை வரிகளாய் ...அற்புதம்

    ReplyDelete